Friday, March 19, 2010

முதல் பதிவு -"Games indians play" - புத்தக விமா்சனம்

திரு.ரகுநாதன்   இந்தியனின்  இந்தியதனங்களுக்கான காரணங்களாக தான் நினைப்பதை  Game theory-ல் ஒரு முக்கியமான அங்கமான சிறையாளியின் மனகுழப்பம்( Prisoner's dilemma ) மற்றும் நடவடிக்கைப் பொருளியல் (Behavioural economics.) கொண்டும்,ஒரு பொருளியளலாரின் பார்வை கோணம் கொண்டும் விளக்க முயன்றுள்ள ஒரு வித்தியாசமான அணுகுமுறை கொண்ட புத்தகம் .



 திரு.ரகுநாதன் 2001-ல் ஆரம்பித்து நான்கு வருடங்கள் ING Vysya bank-ல் president ஆக இருந்திருக்கிறார்.தற்போது GMR infrastructures-ல் மேலாண்மைக் குழுவில் உயரிய பதவியில் இருப்பதுடன் நிறைய பல்கலைக்கழகங்களில் விசிட்டிங் ப்ரொபஸராகவும் இருக்கிறார். Economic times பத்திரிகையில் தொடர்ச்சியாக எழுதி வருபவர். . இந்தியர்கள் தனிப்பட்ட மனிதர்களாக மிகுந்த புத்திசாலிகளாக இருந்தும் ஒரு தேசமாக ஏன் அப்படி இல்லை?.ஊழல் மிகுந்துள்ளது.சட்டங்களை மதிப்பதில்லை வீடுகளை சுத்தமாக வைத்திருக்கும் நாம் ஏன் தெருக்களை அப்படி வைப்பதில்லை?.இது போன்ற நம் அன்றாட வாழ்க்கையில் நாம் செய்யும், அனுபவிக்கும் நிறைய விஷயங்களை  Prisoner's dilemma மற்றும் Behavioural economics கொண்டு விளக்க முயன்றுள்ளார்


கீழே Prisoner's dilemma -வை சுலபமாக விளக்க என்னளவில் முயன்றுள்ளேன்.


இப்போது நீங்களும் நானும் சேர்ந்து ஒரு குற்றம் செய்துள்ளோம்.நாம் இருவரும் மிக அதிகபட்ச சுயநலவாதிகள்(Supremely selfish) மற்றும் யோசிக்கும் திறன் வாய்ந்த காரியவாதிகள்(Coldly rational).நம் இருவரையும் இரு வேறு சிறையில் வைத்து விசாரணை செய்கின்றனர்.ஒருவருடன் ஒருவர் தொடர்பு கொள்ள எந்த வித வழியுமில்லை .விசாரணை செய்பவர் உங்களிடம் "என்னிடம் அனைத்து விதமான ஆதாரங்களும் உள்ளது.உங்கள் இருவரையும் தலா இரண்டு வருடங்கள் சிறையில் அடைக்கப் போகிறேன்.ஆனால் நீ மற்றவனைக் காட்டிக் கொடுத்துவிட்டால் உன்னை விட்டு விடுகிறேன்.அவனுக்கு 5 வருடங்கள் சிறைத்தண்டனை உண்டு .இதே போன்று உன் நண்பணிடமும் கேட்கப்படும். அவனுக்கும் இந்த சலுகை உண்டு" என்று சொல்கிறார்.இதில் ஒருவர் மட்டும் அடுத்தவரை காட்டி கொடுத்தால் ஒருவர் விடுதலை அடையலாம்.ஆனால் இருவரும் ஒருவரை ஒருவர் காட்டிக்கொடுத்து விட்டால் இருவருக்கும் தலா 4 வருடங்கள் சிறை தண்டனை உண்டு.


சுருக்கமாக சொன்னால்


1) இருவருமே ஒருவரை ஒருவர் காட்டி கொடுக்கவில்லை என்றால் இருவருக்கும் தலா 2 வருடங்கள்.

2) ஒருவர் மற்றவரை காட்டி கொடுத்தால் ஒருவருக்கு 5 வருட சிறை தண்டனை .ஒருவருக்கு எந்த தண்டணையும் இல்லை.

3)இருவரும் ஒருவரை ஒருவர் காட்டி கொடுத்தால் இருவருக்கு தலா 4 வருடங்கள் சிறை தண்டனை


இதில் நட்பு,நேர்மை,பண்பு எதுவும் குறுக்கிடாது.உங்கள் நலன் மட்டுமே முக்கியம் . இந்த விதி மிகவும் முக்கியம்.Prisoner's dilemma பற்றி மேலும் அறிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்.


நீங்கள் மற்றவரை காட்டிக்கொடுக்காமல் அமைதியாக இருந்து, ஆனால் மற்றவர் உங்களை காட்டிக் கொடுத்துவிட்டால் உங்களுக்கு 5 வருட சிறை தண்டனை .ஆனால் அவர் தப்பித்து விடுவார்.நீங்கள் மற்றவரை காட்டிக் கொடுத்து அவர் அமைதியாக இருந்து விட்டால் நீங்கள் தப்பித்துக் கொள்ளலாம் அவரும் உங்களை காட்டிக் கொடுத்தால் இருவருக்கும் 4 வருடங்கள். இப்போது நீங்கள் என்ன முடிவு செய்வீர்கள்?.


இந்த விளையாட்டின் விதிகள் நமது பொதுவாழ்க்கையின் பல இடங்களிலஎப்படி் ஒத்து வருகிறது?. அதை நாம் இந்தியர்கள் எப்படி எதிர்கொள்கிறோம் ?, மற்றும் அது எப்படி நம்மையும்,நம் சமுதாயத்தையும் பாதிக்கிறது என்பதை சொல்ல முயன்றுள்ளார். உதாரணத்திற்கு நீங்களும் நானும் சேர்ந்து ஒரு வியாபாரம் செய்கிறோம்.நீங்கள் பொருள் கொடுக்கிறீர்கள். நான் பணம் கொடுக்கிறேன். ஆனால் நான் வேறு ஊரிலும் நீங்கள் வேறு ஊரிலும் இருக்கிறீர்கள்.இருவருமே நேர்மையாக கடைசி வரை நடந்து கொள்ளலாம். இதில் ஏதாவது ஒரு மாதம் நீங்கள் எனக்கு பொருள் கொடுக்காமலோ,பணத்துக்கு தகுந்த பொருளோ கொடுக்காமல் ஏமாற்றலாம்.நானும் அதே போல் செய்யலாம்.இல்லை ஒரு மாதம் இருவருமே மாத ஒருவரை ஒருவரை ஏமாற்றி கொள்ளலாம் .ஒரு மாதம் ஏமாற்றி அடுத்த மாதம் ஒழுங்காக நடந்தால் என்ன ஆகலாம் என்பதையும் Prisoner's dilemma மற்றும் iterative Prisoner's dilemma மூலம் சொல்லியுள்ளார்.


மேற்கூறிய அதே உதாரணத்தை இரண்டு சிறிய வியாபாரிகளாக இல்லாமல். இரு உலகளாவிய நிறுவனங்கள் எனக் கொள்ளும் போது இந்த விளையாட்டின் விதிகள் எப்படி நம்மை பாதிக்கும் என்பதை நீங்கள் எளிதாக உணரலாம். இதில் நீங்கள் ஒரு கட்சி ஊழல் செய்யும் அதிகாரிகள் ஒரு கட்சி , இல்லையெனில் நீங்கள் ஒரு கட்சி ஆளும் அரசு ஒரு கட்சி இப்படி வேறுபட்ட கட்சிகளைக் கொண்டு யோசிக்கும் போது மிகவும் சுவாரசியமான சில விசயங்களை அறிய முடிகிறது.இதை மேலும் நாம் ஏன் சட்டங்களை மதிப்பதில்லை , ஏன் ஊழல் அதிகமாக உள்ளது , ஏன் தனி மனித ஒழுங்கு இல்லை போன்ற பல விசயங்களுக்கும் பொருத்த முயற்சி செய்து உள்ளார்.எல்லா சமயங்களிலும் இந்த விதிகள் பொருந்தாவிடினும் , முழு அளவில் ஆணித்தரமாக இதுதான் சரி என்று என்னை திருப்திபடுத்தாவிடினும் ,நிறைய யோசிக்க வைத்துள்ளார்.


உதாரணத்திற்கு இதில் கூறப்பட்டு உள்ளதின்படி இந்த விளையாட்டிற்கு சிறந்த தீர்வுகளில் ஒன்றாக நான் கருதுவது இருவரும் அமைதியாக இருந்து விடுவது.இதன் மூலம் இருவருக்கும் 2 வருடம் மட்டுமே சிறை வாழ்க்கை .அதாவது ஒரு கட்சியை நீங்களாகவும் உங்கள் நடவடிக்கையால் நேரடி பயன் பெறுபவர்களாகவும், இன்னொரு கட்சியை உங்களைத் தவிர்த்த உலகமாகவும் கற்பனை செய்து கொண்டால் நீங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் உதவுவதின் மூலம் இருவரும் நீண்ட காலம் சந்தோசமாக இருக்கலாம்(தலா இரண்டு வருடம் விதி). மற்ற எந்த விதிகளின்படி எடுத்து கொண்டாலும் அதில் ஏதோ ஒரு கட்சிக்கு அல்லது இரண்டு கட்சிக்கும் பாதிப்பு அதிகம்.ஆனால் நாம் சுயநலவாதிகளாக இருந்தால் அடுத்தவருக்கு வரும் பாதிப்பை பற்றிக் கவலைப்படாமல் நாம் நன்றாய் இருந்தால் போதும் என்பதை மட்டுமே தேர்ந்து எடுப்போம்.அதைத்தான் இப்போது அநேகம் பேர் செய்து கொண்டு இருக்கிறோம்.



நான் எப்படி இந்த விளையாட்டை விளையாடிக் கொண்டு இருக்கிறேன் என்று யோசித்ததில் தோன்றியவை கீழே:


முதலில் சில நல்ல விசயங்கள் :


1) நல்லதொரு குடிமகனாக almost எல்லா வரிகளையும் கட்டுகிறேன் (நம்ம எங்க கட்டறது. பைசா சுத்தமா பிடுங்கிட்டுத்தானே கொடுக்கறாங்க ).

2) முழுமையாக இல்லாவிடினும் almost அனைத்து சட்டத்துக்கும் உட்பட்டு நடக்கிறேன்

3) பொருளாதாரத்தில் எனக்கு கீழ் இருப்பவர்களுக்கு , இயலாதவர்களுக்கு முடிந்த வரை உதவுகிறேன்.

4)எனது சுற்றுப்புறத்தை சுத்தமாக வைக்க முயல்கிறேன் (நாங்க இருக்கிற வீட்டை சொல்லலை.அது கண்றாவியா இருக்கும்.நான் சொல்வது தெருக்களில் குப்பை போடுவது,கண்ட இடங்களில் துப்பாமல் இருப்பது...)

5) சமீப காலங்ககளாக அலுவலகம் , வெளியுலகு செல்லும் இடங்களில் ஏதேனும் தவறு நடந்தால் அதை நியாயமான முறைகளில் எதிர்த்து கேட்கிறேன்

6)தண்ணீர் , பெட்ரோல் போன்ற இன்றியமையாத பொருட்களை முடிந்த வரை வீணடிக்காமல் இருப்பது ..இது போன்று இன்னும் சில


இனி கெட்ட விசயங்கள் :


1) வரி காட்டுவதிலும் சில இடங்களில் சில ஏமாற்று வேலைகள் (ex . HRA)

2) சில சமயங்களில் லஞ்சம் கொடுத்து எனது வேலையை சீக்கிரம் செய்ய முயல்வது

3) சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்தாலும் மற்றவர்களிடம் அந்த விழிப்பு உணர்வை ஏற்படுத்தாமல் இருப்பது

4) தவறுகளை திருத்த குறைந்த பட்ச முயற்சி மட்டுமே எடுப்பது.நடக்கவில்லை எனில் அப்படியே விட்டு விடுவது.

5) இன்னும் எவ்வளவோ உதவிகளை நிறைய பேருக்கு செய்ய முடியும் என்றாலும் சோம்பேறித்தனத்தாலும் ,அலட்சியதாலும் செய்யாமல் இருப்பது

.................இது போன்று இன்னும் பல



கொஞ்சம் அசிங்கமாகத்தான் இருந்தது சமுதாயத்தினால் நான் பெறும் உதவிகள் , சமுதாயத்துக்கு நான் திருப்பி செய்வதை விட மிக அதிகமாக உள்ளது. சமுதாயத்தில் இப்போது என் பாதிப்பு , பாலைவன மணலில் ஊறும் எறும்பின் தடம் போல் மிகக் குறைவாகத்தான் உள்ளது.அது பாலைவன மணல் வடிவத்தை மாற்றும் பெரும்காற்றை போலவோ, வெப்பம் தனிக்கும் பெருமழை அளவுக்கோ இல்லாவிடினும் பின்வரும் காலங்களில் பாலையில் நடப்போர் பருகும் ஒரு சிறு சுனை அளவுக்காவது இருக்கவேண்டும் என்பது என் எண்ணம்.அதற்கு நான் இன்னும் நிறைய மாற வேண்டி உள்ளது.


வாய்ப்பிருந்தால் படித்து யோசித்துப் பாருங்கள்.ஒரு வித்தியாசமான புத்தகம்