Wednesday, April 7, 2010

எது வீடு?

இங்கு வீடு என்று நான் குறிப்பிடுவது "சொந்த ஊர்" என்று தமிழிலும் ஆங்கிலத்தில் "hometown" என்றும் பரவலாக வழங்கப்படும் இடம் பற்றியே.பொதுவான உரையாடல்களில் பெயருக்கு அடுத்து கேட்கப்படும் கேள்வியாக இருப்பது பெரும்பாலும் இதுவே. "ஹோம்" என்பது எது?.என் அப்பா அம்மா பிறந்த ஊரா? பெற்றோர்களோ ,சொந்தக்காரர்களோ உள்ள ஊரா?,நான் இப்போது வேலை பார்க்கும் ஊரா?,இல்லை நான் என் வாழ்வின் பெரும்பகுதியை கழித்த ஊரா?.எது என் வீடு ?என் பெற்றோர்கள் பிறந்த ஊர் தேனி மாவட்டத்தில் உள்ள போடிநாயக்கனூர் என்கிற கிட்டத்தட்ட நகரமாகி விட்ட ஒரு பெரிய கிராமம்.நான் என் பெரும் பகுதி பள்ளி படிப்பை முடித்தது பழநியில்(என்னுடய விடலைப் பருவ வாழ்க்கை ).கல்லூரி படித்ததோ சென்னையில்(காளைப் பருவம்).இப்போது பொட்டி தட்டி வேலை பார்த்து கொண்டு இருப்பது பெங்களூரில்.


மேற்குறிப்பிட்ட அனைத்து ஊர்களுமே எனது வாழ்க்கையில் அதனதன் வழிகளில் மிக முக்கியமான பங்குகள் வகித்திருக்கின்றன.எனது தாய் தந்தையர் பிறந்த ஊர் போடிநாயக்கனூர்.நான் என்னுடய சிறு வயதில் பள்ளி விடுமுறை அனைத்தையும் இங்குதான் கழித்திருக்கிறேன்.டயர் உருட்டல்,கோலி ,கில்லி என விடுமுறைகள் பஞ்சை பரந்த காலங்கள்.இப்போதும் பார்த்தவுடன் ஆதுரத்துடன் கைபிடித்து "எப்டி இருக்குற?வீட்டுக்கு வா.சாப்டுட்டு போகலாம்னு " சிரிக்கும் கண்களும் , மகிழ்ந்த நெஞ்சமுமாக கூப்பிடும் சொந்தங்கள் 80% இங்குதான் இருக்கிறார்கள்.என் மேல் பாசம் கொண்டவர்களும்,என் நலனில் அக்கறை கொண்டவர்களும் இங்கு நிறைய உள்ளனர்.


அப்பாவின் அலுவல் காரணமாக இடைநிலை வகுப்புகளில் அவ்வப்போது வேறு ஊர்களில் படித்தாலும் எனது ஆரம்ப,மேல்நிலை ,உயர்நிலை பள்ளி படிப்பு பழநியில்தான் அமைந்தது . பின்பு சென்னையில் எனது கல்லூரிப் பருவம் கழிந்தது. வாழ்கையில் பொருளாதார ரீதியில் முன்னேற அடித்தளமாக இருந்த கல்வியும் ,கலாட்டாகளும் கொண்ட வருடங்கள்.இந்த இரண்டு ஊர்களும் அங்கு இருந்த மனிதர்களும் எனது வாழ்க்கையில் மறக்க முடியாத எவ்வளவோ நினைவுகளை கொடுத்திருக்கிறார்கள். கவலைகள், பொறுப்புகள் ஏதும் இல்லாத வாழ்க்கை , நினைவில் என்றும் மறவாத பதின்பருவ சேட்டைகளும் குறும்புகளும், காதல்களும் கொண்ட மிக சந்தோசமான வாழ்க்கை. வாழ்க்கையில் எனக்கு இதுவரை வந்த நல்லது , கெட்டது அனைத்திலும் உதவிய,உடன் இருந்த மிக நெருங்கிய நண்பர்களில் பலரை நான் கண்டு கொண்டதும் இங்கேதான்.


இப்போது இருப்பது பெங்களூருவில் நான் வேலைக்கு சேர்ந்து,சம்பாரித்து எனக்கென்று இந்த சமுதாயத்தில் ஒரு அடையாளம் கிடைத்த பொழுது, இருந்த நகரம். எனது குடும்பம் , நண்பர்களுடன் கடந்த 7 1/2 வருடங்களாக வாழ்ந்து வரும் இடம்.கல்லூரி நண்பர்கள் அல்லாது அதன் பின் மனதுடன் நெருங்கிய ,என்னுடைய தற்போதைய வாழ்வின் ஒரு அங்கமாகவே ஆகிவிட்ட நண்பர்களும், பெற்றோரை பிரிந்து வந்து வெளி உலகம் என்பதை தெரிந்து கொள்ளவும்,பல்வேறு பட்ட மனிதர்களை பற்றி தெரிந்து கொள்ளவும் உதவிய நகரம்.


இதே போன்ற அனுபவங்கள் , ஊர்களின் பெயர்கள் மட்டும் மாறி பலருக்கும் இருக்கலாம் .அனைத்து இடமுமே மனதுடனும் , உணர்வுகளுடனும் சம்பந்தப்பட்டவையே.இதில் எப்படி தேர்ந்தெடுப்பது ? .பெற்றோரை சந்தித்து ஊர் திரும்பும் ஒவ்வொரு தடவையும் ஏற்படும் மன இறுக்கத்தையும் ,வெறுமையையும் கொண்டு சொல்வதா ? அல்லது வேலை செய்யும் ஊரில் மனைவியுடனான ஒரு சிறுநடை , நண்பர்களுடனான அளவளாவல் .... போன்றவை தரும் மனநிறைவையும் , முழுமையையும் கொண்டு சொல்வதா?


உங்கள் கருத்தையும் சொல்லி செல்லலாமே.

1 comments:

said...

யாதும் (சொந்த) ஊரே யாவரும் கேளிர்
;-)

Post a Comment